ராமாயணத்தில் அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்ற ஒன்று இமாலயத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் அதிசயித்துள்ளனர்.
இமாலயத்தில் உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை பன்மடங்கு அதகரித்து ஒழுங்கு படுத்துவதும், பிராண வாயு பற்றாக்குறை இருக்கும் மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கவும் செய்யும் ரோடியோலா என்ற அதிசய மூலிகையின் மகத்துவங்களை விஞ்ஞானிகள் பாராட்டி வருகின்றனர்.
இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி’ என்றே கருதுகின்றனர் விஞ்ஞானிகள். லடாக்கில் ‘சோலோ’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. ஆனால் லடாக்வாசிகள் இதன் இலைகளை உணவுப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.
ரோடியோலா என்ற இந்த மூலிகை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது, கடினமான வாழ்விடச் சூழலில் நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது, அனைத்திற்கும் மேலாக கதிரியக்கத்தின் விளைவுகளிலிருந்தும் இந்த மூலிகை உயிர்களைப் பாதுகாக்கிறது என்று ஆய்வுக் கழகத்தின் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
ரசாயன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை வெளிப்படுத்தும் நச்சுக் கதிரியக்கத்தின் விளைவுகளை இந்த ரோடியோலா மூலிகை அகற்றும் என்கிறார் இவர்.
மேலும் மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணையாகவும் ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி - தி இந்து
26-08-2014
No comments:
Post a Comment