"உழைப்பே வெல்லும்' புதிய திட்டம்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
தொழிலாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில் "உழைப்பே வெல்லும்' என்ற புதிய செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் தொடக்கி வைத்தார்.(16-10-2014)
தில்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் "தீனதயாள் உபாத்யாய ஷிரமேவ ஜெயதே' (உழைப்பே வெல்லும்) என்ற செயல்திட்டத்தின் கீழ், பல்வேறு துணைத் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்தார். தொழிலாளர் வைப்பு நிதியை எளிதில் மாற்றிக் கொள்ள ஏதுவாக நிரந்தரக் கணக்கு எண், தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்துடன் தொடர்புகொள்ள ஒற்றைச் சாளர இணையதள வசதி, தொழிலக ஆய்வுத் திட்டம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
திறன் ஊக்குவிப்புத் திட்டம்: "புரோத்சாஹன் யோஜனா' என்ற பெயரிலான பயிற்சி மாணவர்களின் திறன் ஊக்குவிப்புத் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது: உலகிற்கு மனித ஆற்றலை வழங்குவதற்கான மிகப்பெரிய வளம் நம் நாட்டில் உள்ளது. தற்போது, நாட்டில் 2.82 லட்சம் பயிற்சி மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களின் பயிற்சித் திட்டத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்புக் கணக்குகளில் ரூ.27,000 கோடி உரிமை கோரப்படாமல் கிடக்கிறது. அதன் உரிமையாளர்களுக்கு இத்தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன். இந்தப் பணமானது ஏழைகளுக்குச் சொந்தமானது.
அரசானது நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயல்படுகிறதே தவிர, சந்தேகத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, மாணவர்கள் சுயச் சான்றளிப்பு ஆவணங்களை அளிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. முன்பு, அதிகாரிகளின் கையொப்பத்தைப் பெறுவதற்காக மாணவர்கள் மிகவும் அலைய வேண்டியிருந்தது. அந்த முறையைத் தற்போது நீக்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பற்ற, ஏதோ ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற ஒரு பட்டதாரி, சமூகத்தால் மதிக்கப்படுவதும், ஐ.டி.ஐ. தொழில் பயிற்சி நிலையங்களில் பயின்றோர் மதிக்கப்படாததும் முரண்பாடாக இருக்கிறது. நாம் தொழிலாளர்களை மரியாதைக்குரியவர்களாகக் கருதுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். ஷிரம யோகியானவர் (உழைப்பாளர்), ராஷ்டிர யோகியாகவும் (நாட்டுக்கு உழைப்பவர்), ராஷ்டிர நிர்மாதாவாகவும் (தேசத்தைக் கட்டமைப்பவர்) மாறுவதை கருணையுடன் கூடிய அணுகுமுறை உறுதிப்படுத்தும்.