யார்
கவிஞன்?
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
கைம்மாறு விளைந்துபுகழ் பெறுதல் வேண்டி
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை
மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்தி விட்டுத்
தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;
ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்
ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன்
ஆவன்;
மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது
காட்சிக்குப் புளியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பைசுபவன் கவிஞன் ஆவன்;
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்.
சொற்பொருள்:
- கைம்மாறு – பயன்
- மாசற்ற – குற்றமற்ற
- தேட்டையிட – செல்வம் திரட்ட
- மீட்சி – மேன்மை
- மாள – நீங்க
ஆசிரியர் குறிப்பு:
பெயர் : முடியரசன்
இயற்பெயர் : துரைராசு
பெற்றோர்
: சுப்புராயலு, சீதாலட்சுமி
ஊர் : தேனி
மாவட்டம் பெரியகுளம்
இயற்றிய நூல்கள் : பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம்,
முடியரசன் கவிதைகள் முதலியன.
பணி : தமிழாசிரியர், மீ.சு. உயர்நிலைப்
பள்ளி, காரைக்குடி.
பட்டம் : பறம்புமலையில் நடந்த விழாவில் கவியரசு
என்னும் பட்டம்
குன்றக்குடி அடிகளாரால்
வழங்கப்பெற்றது.
பரிசு : பூங்கொடி என்னும் காவியத்திற்காக 1966-ல்
தமிழக
அரசு பரிசு வழங்கியது .
சிறப்பு : முடியரசன், பாரதிதாசன் பரம்பரைக்
தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப்
பழகியவர்.
காலம் : 07-10-1920 முதல் 03-12-1998 வரை