இந்தியா, ஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், தில்லியில் வெள்ளிக்கிழமை (05/09/2014) கையெழுத்தானது.
இந்தியா வந்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இந்தியாவுக்கு நீண்ட காலத்துக்கு யுரேனியத்தை ஆஸ்திரேலியா வழங்கும் என்று அந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து இந்தியா முதல் முறையாக யுரேனியம் பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக அளவில் யுரேனியம் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிடம், யுரேனியம் வழங்குமாறு கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில், இந்தியா கையெழுத்திடாததைக் காரணம் காட்டி, இதுவரை அதற்கு மறுப்புத் தெரிவித்துவந்த ஆஸ்திரேலியா, தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
நன்றி - தினமணி