23 September, 2014

திரிகடுகம் - 7 ஆம் வகுப்பு சமச்சீர்

     

         உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
         பால்பற்றிச் சொல்லா விடுதலுந் - தோல்வற்றிச்
         சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந்
         தூஉய மென்பார் தொழில்.

நீராடி யுண்பதும், பொய்க்கரி புகலாமலிருப்பதும், உயிர் நீங்கினும் சான்றாண்மை நீங்காதிருப்பதும் தூயவர் செயல்கள்

        இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
        நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும்
        துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
        நன்றறியும் மாந்தர்க்கு உள.


வறியவர்க்கு பொருளை அளித்தல், இவ்வுலகத்துப் பொருள்களின் நிலையாமையை அறிந்து நல்வழி நிற்றல் , எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல் என்னும் இம்மூன்றும்  அறவழியில் நடக்கும் மக்களுக்கே என்றும் உண்டு  


       முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்

       நிறையிலான் கொண்ட தவமும் - நிறைஒழுக்கம்
       தேற்றாதான் பெற்றவனப்பும் இவைமூன்றும்
       தூற்றின்கண் தூவிய வித்து.

முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அழகும் வீண் என்பது.
  

திரிகடுகம்

காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352) 

ஆசிரியர் 

திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. 

 நூல் அமைப்பும் சிறப்பும் 

திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.

இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது. 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...