ஏழை மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்வரை, உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ-WTO) வர்த்தக வசதியேற்படுத்தும் ஒப்பந்தத்தை (டி.எஃப்.ஏ.-TF (Trade Facilitation) Agreement) ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 2 நாள் பொதுக் குழுக் கூட்டம், வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகளிடையே தாராள வர்த்தகத்தை ஊக்குவிக்கும் புதிய நெறிமுறைகள் அடங்கிய வர்த்தக வசதியேற்படுத்தும் ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் பங்கேற்ற டபிள்யூடிஓ அமைப்புக்கான இந்தியத் தூதர் அஞ்சலி பிரசாத் வெள்ளிக்கிழமை பேசியதாவது: 'ஏழை மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பிரச்னைக்கும், ஏழை நாடுகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இதர பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு தீர்வு காணப்படும்வரை, டி.எஃப்.ஏ. ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க முடியாது. பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை, டி.எஃப்.ஏ. ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதையும் ஒத்திவைக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதனையேற்று, டி.எஃப்.ஏ. ஒப்பந்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment