சூரிய ஆற்றலில் (சோலார்) இயங்கும் முதல் விமானம் அடுத்த ஆண்டு உலகத்தை சுற்றி வர முயற்சி மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதற்கான வெள்ளோட்டம் ஸ்விட்சர்லாந்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்விட்சர்லாந்தின் பேயர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட "சோலார் இம்பல்ஸ் 2' (எஸ்ஐ2) என்ற விமானம் 2 மணி நேரம் 17 நிமிடங்களுக்கு வானத்தில் பறந்த பின்னர் விமான நிலையத்துக்கு திரும்பி வந்தது.
மார்கஸ் ஷெர்டெல் என்ற விமானி இந்த வெள்ளோட்டத்தை நடத்தினார்.
ஒருவர் மட்டும் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சோலார் விமானங்களில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் பிக்கார்டு மற்றும் ஆண்ட்ரே போர்ஷ்பெர்க் ஆகிய இருவரும் முதன் முறையாக உலகத்தை சுற்றிவரும் முயற்சியாக 2015ஆம் ஆண்டு பயணத்தை தொடங்கவுள்ளனர்.
கார்பன் இழையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த சோலார் விமானத்தின் இறகுகளின் நீளம் 72 மீட்டராகும். இது போயிங் 747-8ஐ ரக விமானத்தைக் காட்டிலும் பெரியது. மேலும், ஒரு காருக்கு சமமான 2,300 கிலோ எடை உடையதாகும்.
இந்த விமானத்தில் 17,000 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதிலுள்ள 633 கிலோ எத்தியம் ரீசார்ஜ் பேட்டரிகள் இரவில் விமானம் பறக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment