லோக்பால் தேர்வுக் குழுவுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
லோக்பால் தேர்வுக் குழுவில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் குறித்து இறுதி செய்வதற்கு சட்டத் துறை அமைச்சகத்துடன், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்காக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் வழங்கப்படும் பட்டியலில் உள்ளவர்களைத் தவிர, வெளியிலுள்ள தகுதியான நபர்களை பரிந்துரைக்க லோக்பால் தேர்வுக் குழுவுக்கு விரைவில் அதிகாரம் வழங்கும் விதமாக, புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
முன்னதாக அரசு தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி தலையிலான குழுவினர், லோக்பால் தேர்வுக் குழுவின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ரோத்தகி குழுவின் அறிக்கையானது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் பரிசீலிக்கப்பட்டு, லோக்பால் தேர்வுக் குழுவுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகே லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்ய முடியும்.
நன்றி-தினமணி
26-08-2014
No comments:
Post a Comment