14 October, 2014

திருவாரூர் நான்மணிமாலை


என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோவில் முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் – அன்புஎன்னாம் புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகு வார் சொற்பொருள்: என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த தென்கமலை – தெற்கில் உள்ள திருவாரூர் பூங்கோவில் – திருவாரூர் கோவிலின் பெயர் புண்ணியனார் – இறைவன் நூல் குறிப்பு: திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர் நான்மணிமாலை. இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப் பொருள்படும். நான்மணிமாலை என்பது தமிழில் வழங்கும் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆனா மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆனா நாற்பது செய்யுள்களை கொண்டது.
குமரகுருபரர்
திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண்குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. பெற்றோர் கவலையடைந்தனர். கவிராயர் ஒரு முடிவுக்கு வந்தவராய், சிவகாமி நமது பிள்ளை குருபரன், முருகன் கொடுத்த வரம். அவனால் தான் குழந்தைக்கு பேசும் ஆற்றலை தர முடியும். நாம் திருச்செந்தூர் சென்று அவனிடம் முறையிட்டு விரதம் இருப்போம். அவன் பார்த்து எது செய்தாலும் சரி என்றார். அதன்படி அவர்கள் குழந்தையுடன் திருச்செந்தூர் சென்றனர். கடலலைகள் கோயில் மதிற்சுவரில் அடித்து விளையாடியதை குருபரன் பார்த்து கொண்டிருந்தான். கடலுக்குள் இறங்கி அலைகளுடன் விளையாடினான். அந்த அலைகள் கரைகளில் மோதிய சப்தத்தில் ஓம், ஓம் என்ற மந்திர ஒலி கேட்டது. கவிராயரும், அவரது மனைவியும் அங்கேயே தங்கி விரதம் மேற்கொண்டனர். காலையில் கடலில் குளித்து, நாழிக்கிணற்றில் நீராடி முருகனை வழிபட்டு, ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். ஆனால், குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர், குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லமாட்டோம் என பிடிவாதமாக முருகனிடம் சொல்லி விட்டனர். 45வது நாள் மாலையில், கவிராயர் தன் மனைவி குழந்தையுடன் கோயிலுக்குள் நுழைந்தார். குழந்தை ஏக்கத்துடன் பெற்றோரை பார்த்தது. இதைக்கண்ட தகப்பனின் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்ட, முருகா! என் தெய்வமே! இன்னும் எத்தனை நாள் தான் எங்களை சோதிப்பாய். நீ கருணைக்கடல் ஆயிற்றே! இந்த குழந்தைக்கு மட்டும் கருணை காட்டாதது ஏன்? என மனமுறுகி பிரார்த்தித்தார். அவரது மனைவியும், சண்முகா! குழந்தை இல்லாமல் இருப்பது கொடுமைதான். அதைவிட கொடுமையானது ஊமைக்குழந்தையை வைத்திருப்பது இல்லையா? நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களுக்கு தண்டனை கொடு. இந்தக்குழந்தை என்ன தவறு செய்தது? அதை ஏன் தண்டிக்கிறாய்? எங்கள் குழந்தையை காப்பாற்று, என கதறினாள். இந்த நிலையில் குருபரன் வாய்திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க, தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் அந்த பாலகன், கார்மேகம் கடும் மழை பொழிவது போல கவி மழை பொழியலானான். முருகனைப்பற்றிய பாடல்கள் அவன் வாயிலிருந்து காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு ஒலித்தது. குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். தேனினும் இனிய குரலில் அவன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக விட்டார் குருபரர். குமரா! முருகா! உனது கருணையால் ஊமையும் பேசுவது மட்டுமில்லாமல், பெரும் கவிஞனும் ஆவான் என்பதை நிரூபித்துவிட்டாய். உனது கருணையே கருணை என உள்ளம் நெகிழ்ந்தனர் பெற்றோர். பெரும்கவியாக திகழ்ந்த குருபரர் பெற்றோருடன் அதிக நாட்கள் தங்கவில்லை. அவர்களது ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். மக்கள் அவரை குமரகுருபர சுவாமிகள் என அழைத்தனர். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்றிருந்த போது, மடை திறந்த வெள்ளம் போல், மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலை பாடினார். அன்னையை சிறு குழந்தையாக பாவித்து, அவளது அழகு, அருள், ஆற்றல், திருவிளையாடல்கள் அனைத்தையும் பாடி நூலாக வடித்தார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி, மன்னா! என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புலவர்கள் எல்லாம் கூடியிருக்க, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. பின்னர் குமரகுருபரர் காசி சென்று விஸ்வநாதரை புகழ்ந்து பாடினார். ஒரே நாளில் இந்துஸ்தானி கற்று அங்கியிருந்த சுல்தானிடம் பேசி, அனுமதி பெற்று கேதார் ஆலயத்தின் அருகே குமாரசுவாமி மடம் என்ற சைவ மடத்தை நிறுவினார். இப்போதும் காசியில் இந்த மடம் சமயப்பணி செய்து வருகிறது. குமரகுருபரர் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட் கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை என இன்னும் பற்பல நூல்களால் தமிழன்னையை அலங்கரித்த பெருமகன் அவர். முருக பக்தராகவும், மீனாட்சிபக்தராகவும், சரஸ்வதி பக்தராகவும் திகழ்ந்தவர். காசியில் ஒளரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ என்ற மன்னர்முன் சிங்கத்தின் மேல் ஏறிச் சென்று அந்த சுல்தானை வியக்க வைத்து, தாம் காசியில் நிறுவிய இந்து மடத்திற்கு நிலத்தை தானமாகப் பெற்றவர். இவர் காசியில் இந்துஸ்தானி மொழியில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக் கவரப்பட்டுத்தான் துளசிதாசர் இந்தியில் ராமாயணம் எழுதும் உத்வேகம் பெற்றார். முருகப் பெருமானையே சிந்தனை செய்து வாழலானார் குமரகுருபரர் சில ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அவர் தன் பெற்றோரை அழைத்தார். இந்த உலகிற்கு நான் வரக் காரணமானவர்கள் நீங்கள். இப்பிறவியில் நீங்களே என் தாய், தந்தை ஆனால் எல்லா ஆன்மாக்களுக்கும் என்றென்றும் தாயாகவும் தந்தையாகவும் பரம்பொருளை நாடுகிறது என் உள்ளம். நான் துறவுநெறியில் ஈடுபட்டுத் தமிழையே துணையாய்க் கொண்டு வாழ விரும்புகிறேன். உங்களை நான் பிரிந்து செல்வதாக எண்ணலாகாது. உங்களுக்கும் சொந்தமான முருகன் அருள் உங்களை எப்போதும் காத்து நிற்கும்! கடவுள் துணை உங்களுக்கும் இருக்கும்போது நான் என்கிற இந்த மனிதத் துணை தேவையில்லை. ஒரே ஊரில் நான் வாழ்வதை விரும்பவில்லை. பல ஊர்களுக்குச் சென்று பல்வேறு ஆலயங்களை தரிசித்து அங்குள்ள தெய்வங்கள் பற்றியெல்லாம் பாடல் புனைய விழைகிறேன்! தன் அருமைப் புதல்வன் பேசிய பேச்சைக் கேட்டுக் கவிராயரின் கண்கள் கசிந்தன. பிள்ளைக்கு மணமுடித்துப் பேரன் பேத்தியைப் பார்க்க எண்ணியிருந்த சிவகாச சுந்தரி செய்வதறியாது திகைத்தாள். அப்போது முருகன் அவள் ஏற்கெனவே தன் சன்னதியில் சொன்ன வாசகத்தை அவள் ஆழ்மனத்தில் நினைவுபடுத்தினான். முருகன் அருளால் பிறந்த குழந்தை முருகனிடமே இவனை ஒப்படைப்போம் என்றல்லவா அன்று சொன்னாள்? முருகன் திருவருளால் இத்தனை ஆண்டு காலம் குமரகுருபரனோடு வாழும் பேறு கிடைத்தது. மற்றபடி முருகன் சன்னதியில்தானே இவன் கவிமழை பொழியத் தொடங்கினான்? அன்றே முருகன் இவனை ஆட்கொண்டு விட்டான். தன் பிள்ளையாகத் தமிழன்னைக்குத் தத்துக் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதை அவள் புரிந்துகொண்டாள். கண்ணீர் வழிய வழிய அவனை நிரந்தரமாக வழியனுப்பி வைத்தாள். விம்மிய உதடுகளைத் துண்டால் மறைத்துக் கொண்டு கவிராயரும் அவனுக்கு விடைகொடுத்தார். பெற்ற பிள்ளை எப்போதும் பெற்றோருடன் இருந்தால்தான் ஆயிற்றா? அவன் எங்கிருந்தாலும் அவன் புகழைக் கேட்கும்போதெல்லாம் தாங்கள் பெற்ற பிள்ளை என்ற ஆனந்தம் அவனால் கிடைக்கத்தானே போகிறது? அந்த ஆனந்தத்திற்கு விலையேது? குமரகுருபரன் தங்களின் தற்காலிகக் குழந்தைதான். அந்த உறவு நிலையல்ல, செந்தூர்க்குமரனே தங்களின் நிரந்தரக் குழந்தை, கடவுளே நிலையான உறவு என்பதை அவர்கள் மனம் புரிந்துகொண்டு ஆறுதல் அடையத் தொடங்கியது. எஞ்சிய வாழ்வைச் செந்தூர் முருகன்மேல் பக்தி செலுத்தி அவர்கள் வாழலானார்கள். வாய்பேசாத குழந்தைக்குக் கடவுள் அருளால் வாய்ப்பேச்சு வந்ததும், பெற்றவர்கள் சில ஆண்டுகள் அவனை வளர்த்துக் கடவுள் பணிக்கே அவனைத் தந்ததும், உறவுகளைத் துறந்து அவன் துறவியாக வாழ்ந்ததும் குமரகுருபரன் கதை.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...