'உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே
உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமே
கலையு நிறையு மறிவு முதிர முதிரு மதுர நறவமே
கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே
அலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே
அறிவு ளறிவை யறியு மவரும் அறிய வரிய பிரமமே
மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே
வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே'
சொற்பொருள்:
- மதி – அறிவு
- அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
- உதயம் – கதிரவன்
- மதுரம் – இனிமை
- நறவம் – தேன்
- கழுவு துகளர் – குற்றமற்றவர்
- சலதி – கடல்
- அலகு இல் - அளவில்லாத
- புவனம் – உலகம்
- மதலை – குழந்தை
- பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – குமரகுருபரர்
- பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
- ஊர் – திருவைகுண்டம்
- இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை,திருவாரூர் மும்மணிக்கோவை , நீதிநெறி விளக்கம் முதலியன.
- சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
- இறப்பு – காசியில் இறைவனது திருவடியடைந்தார் ..
- காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
- 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
- இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெருவது பிள்ளைத்தமிழ்.
- பத்து பருவங்கள், பருவத்திற்கு பத்து பாடல் என நூறு பாடல்கள் கொண்டது.
- இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
- பத்து பருவங்களில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை .இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர். ஆண்பாலுக்கும் அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல் ஆகிய மூன்றும் பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் உரியன .
- புள்ளிருக்குவேளூரில் (வைதீஸ்வரன் கோவில்) எழுந்தருளியுள்ள முருகப்பெருமானின் பெயர் முத்துக்குமாரசுவாமி. அவர் மீது பாடப்பட்டதால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என பெயர் பெற்றது
No comments:
Post a Comment