01 September, 2014

வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திரா (27 மே 1928 – 30 ஆகஸ்டு 2014)


பத்மபூஷண் விருது பெற்ற அரசியல், பொருளாதார, வரலாற்று ஆய்வாளர் பிபின் சந்திரா (86) உடல் நலக்குறைவால் ஹரியாணா மாநிலம் குர்கானில் சனிக்கிழமை காலமானார்.

இடதுசாரி சிந்தனை கொண்ட பிபின் சந்திரா, ஹிமாசலப் பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டத்தில் 1928ஆம் ஆண்டு பிறந்தார். அவர், லாகூரில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி, அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர்.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் அரசியல், பொருளாதாரம், சமூக வளர்ச்சி ஆகியவை குறித்து பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார்.

"இன் தி நேம் ஆஃப் டெமாக்ரசி: தி ஜேபி மூவ்மென்ட் அண்ட் தி எமர்ஜென்ஸி' உள்ளிட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார்.

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையம், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்து வந்தார்.
நன்றி-தினமணி 
31-08-2014

ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை ஓய்வு


ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பில் இருந்து நவநீதம்பிள்ளை  ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றி வந்தார்.

இன்றுடன் அவர் பணி ஓய்வு பெறும் நிலையில் இலங்கைக்கு எதிராக, போர் குற்ற விசாரணையை நடத்திவரும் குழு சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.   ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் நவநீதம்பிள்ளை, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதானியாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பொறுப்பிற்கு, ஏற்கனவே ஐ.நா சார்பில் தேர்வாகியுள்ள, ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையத் அல் ஹூசைன் நாளை முறைப்படி பொறுப்பேற்கிறார் என தெரிகிறது.

நன்றி-தினமணி 
31-08-2014

பிபிசி நிர்வாகக் குழுவின் தலைவராகப் பெண் தேர்வு


உலகப் புகழ்பெற்ற வானொலி, தொலைக்காட்சி செய்தி நிறுவனமான பிபிசி}யின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பிபிசி அறக்கட்டளை நிர்வாகக் குழுவின் புதிய தலைவராக ரோனா ஃபேர்ஹெட்(Rona Fairhead) (53) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எச்.எஸ்.பி.சி. வங்கி, பெப்ஸிகோ உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள ரோனா ஃபேர்ஹெட், பிபிசி அறக்கட்டளையின் முதல் பெண் தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற பிபிசி}யில் தலைவர் பொறுப்பு ஏற்கவுள்ளது பற்றிக் கருத்து கூறிய அவர், "திறமை வாய்ந்த பலரைக் கொண்டுள்ள பிரிட்டனின் உன்னதமான நிறுவனத்தின் நிர்வாகக் குழுவுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன் என்றார்.

இவரது நியமனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிரிட்டிஷ் கலாசாரத் துறை அமைச்சர் ஸஜித் ஜாவீத் பின்னர் வெளியிடுவார்.

அதன் பிறகு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கலாசாரம், ஊடகம், விளையாட்டுத் துறைகளின் தேர்வுக்குழு முன்பாக அவர் ஆஜராக வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்களின் விசாரணைக்குப் பிறகே அவர் பதவியேற்பது உறுதி செய்யப்படும்.
நன்றி-தினமணி 
31-08-2014

29 August, 2014

திருவள்ளுவமாலை - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


        தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட 
        பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
        வள்ளைக்(கு) உறங்கும் வளநாட! வள்ளுவனார் 
        வெள்ளைக் குறட்பா விரி 
                                                                                           - கபிலர் 

நூல் குறிப்பு: 
  •   திருக்குறளின்  சிறப்பை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் தனிநூல்  ஒன்று இயற்றப்பட்டது . 
  •  இந்நூலில் 53  புலவர்கள் பாடிய 55 பாடல்கள் உள்ளன.   
  • இப்பாடல்  அறிவியல் அணுகுமுறையை சார்ந்தது. 
உவமை: 
  •  சிறுபுல்லின்  தலையில் தினையளவினும் சிறுபனிநீர் நெடிதுயர்ந்த பனை மரத்தின் உருவத்தை தன்னுள்  தெளிவாக காட்டும். 
உவமிக்கப்படும் பொருள்: 
  •   வள்ளுவரின்  குறள் வெண்பாக்கள் அருள்பெறும் கருத்துக்களைத் தம்மகத்தே அடக்கிக் காட்டும். 

அறிவியல் கருத்து: 
  •   ஒளியைக்  கோட்டம் அடையச் செய்வதனால் தொலைவிலுள்ள  பொருளின் உருவத்தை அண்மையில் தோன்றும்படி  செய்யலாம் என்று  கண்டவர் கலீலியோ கலிலி. 
  •   நெடுந்தொலைவிலுள்ள  பெரிய பனைமரத்தின் உருவத்தைப் புள் நுனியில்  தேங்கிய சிறுபனித்துளி மிகத்தெளிவாகக்  காட்டும் என்ற கபிலரின் சிந்தனை  அன்றைய தமிழரின் அறிவியல் கருத்தை  வெளிப்படுத்துக்கிறது. 

ஆசிரியர் குறிப்பு: க.சச்சிதானந்தன் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  •   இயற்பெயர் -  க.சச்சிதானந்தன் 
  •   ஊர் -  இலங்கையில் யாழ்ப்பாண  மாவட்டத்திலுள்ள  பருத்தித்துறை 
  •   பணி- ஆசிரியர்  பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார் 
  •   புலமை - தமிழ்,  ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் ஆழ்ந்த        புலமை பெற்றிருந்தார்  
  •  படைப்புகள் -  ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி-1954), அன்னபூரணி(புதினம்),  யாழ்பாணக்காவியம்
  •  சிறப்பு -  மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம்  பாடல்களில் கம்பனின்  மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும்  ஒருமித்துக் காணலாம்.

28 August, 2014

ரகசியப் போர்க் கப்பல் கடற்படையில் சேர்ப்பு


உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட, ரேடார் போன்ற சாதனங்களின் கண்காணிப்பில் சிக்காத, நீர்மூழ்கி எதிர்ப்பு ரகசியப் போர்க் கப்பலான "ஐஎன்எஸ் கமோர்ட்டா', விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி முன்னிலையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

நாமே தயாரித்துள்ள இந்த ரகசியப் போர்க் கப்பல் நமது பலத்தை வெளிப்படுத்துவதுபோல் உள்ளது என்று ஜேட்லி பேசினார். கமோர்ட்டா போர்க்கப்பல் குறித்து கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:

""ரேடார் போன்ற கண்காணிப்புச் சாதனங்களில் கண்களில் சிக்காத இந்தப் போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும், ஹெலிகாப்டரையும் சுமந்து செல்லும்.

இந்தப் போர்க்கப்பல் 110 மீட்டர் நீளத்துடனும், 14 மீட்டர் அகலத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கமோர்ட்டா போர்க்கப்பலை இந்திய கடற்படையைச் சேர்ந்த நிறுவனமான கடற்படை வடிவமைப்பு இயக்குநகரம் (டிஎன்டி) வடிவமைத்துள்ளது.
நன்றி-தினமணி 
24-08-2014

ஜி.யு.போப் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



  •   பெயர் -  ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  •   பிறந்த ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  •   பிறப்பு -  கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் பிறந்தார் 
  •   பெற்றோர் - ஜான் போப், கேதரின்  யூக்ளோ போப் 
  •   போப்பின்  தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில்  கிறித்துவமதத்தைப்  பரப்பும் சமய குருவாகப்  பணியாற்றினார்.    அவரைப்போன்று  பணியாற்ற  விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம்  வந்தார்.
  •  அவர் பாய்மரக்  கப்பலில் தமிழகம் வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின.
  •   தமிழ்நாட்டில்  சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார். திருநெல்வேலி  மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார். அங்கு பள்ளிகளை  நிறுவினார். கல்விப்பனியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.
  •  சமயக்கல்லூரியில்  தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின்,  எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
  •  கணிதம், அறிவாய்வு(தருக்கம்),  மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  •   திருநெல்வேலியில்  1842 முதல் 1849 வரை கல்விப் பணியும் சமயப்பணியும்  ஆற்றினார் .
  • 1850இல்  இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம்  வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.
  • தஞ்சையில்  பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல்  முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
  •  அவற்றை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  •  இந்தியன்  சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
  •  அக்கட்டுரைகளில்  புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும்,  தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.
  •  போப் உயர்ந்த  பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600  செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து,   தமிழ் செய்யுட் கலம்பகம்  என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.
  •  பள்ளி  குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
  •  பெரியவர்கள்  கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
  •  மேலை நாட்டார்  தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றையும், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
  •   பழைய தமிழ் இலக்கியங்களில்  இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க  ஏற்பாடு செய்தார்.
  • 1858ஆம் ஆண்டு  உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • இங்கிலாந்திற்கு  சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு  கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
  •   திருக்குறளை 40  ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1866ஆம் ஆண்டு  வெளியிட்டார்.
  •   தமது 86ஆம்  வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.
  • 13.02.1908  அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.
  •  அவர், தம்  கல்லறையில் இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என எழுத வேண்டும் என்று தமது இறுதிமுறியில்  எழுதி வைத்தார்.
  •  அவர்  தமிழ் மாணவன் என்றே தம்மை கூறிக்கொண்டார்.

அனுமன் தேடிய “சஞ்சீவினி” மூலிகை


ராமாயணத்தில் அனுமார் கொண்டு வந்ததாகக் கருதப்படும் சஞ்சீவனி மூலிகை போன்ற ஒன்று இமாலயத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் அதிசயித்துள்ளனர்.

இமாலயத்தில் உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை பன்மடங்கு அதகரித்து ஒழுங்கு படுத்துவதும், பிராண வாயு பற்றாக்குறை இருக்கும் மலைப்பிரதேசங்களில் உயிர்களைப் பாதுகாக்கவும் செய்யும் ரோடியோலா என்ற அதிசய மூலிகையின் மகத்துவங்களை விஞ்ஞானிகள் பாராட்டி வருகின்றனர்.

இந்த ரோடியோலாவை ‘சஞ்சீவனி’ என்றே கருதுகின்றனர் விஞ்ஞானிகள். லடாக்கில் ‘சோலோ’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகையின் அரிய குணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமலே உள்ளது. ஆனால் லடாக்வாசிகள் இதன் இலைகளை உணவுப்பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இதன் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வருகின்றனர். 

ரோடியோலா என்ற இந்த மூலிகை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது, கடினமான வாழ்விடச் சூழலில் நம்மை தகவமைத்துக் கொள்வதற்கான சக்தியை வழங்குகிறது, அனைத்திற்கும் மேலாக கதிரியக்கத்தின் விளைவுகளிலிருந்தும் இந்த மூலிகை உயிர்களைப் பாதுகாக்கிறது என்று ஆய்வுக் கழகத்தின் ஆர்.பி.ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

ரசாயன ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஆகியவை வெளிப்படுத்தும் நச்சுக் கதிரியக்கத்தின் விளைவுகளை இந்த ரோடியோலா மூலிகை அகற்றும் என்கிறார் இவர்.

மேலும் மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணையாகவும் ஜீரண சக்திகளை மேம்படுத்தும் குணங்களும் இந்த மூலிகைக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி - தி இந்து 
26-08-2014

27 August, 2014

அனைத்து குடும்பத்தினருக்கும் வங்கி கணக்கு திட்டம்


நாடு முழுவதும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வங்கிக் கணக்கையும், ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டு வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும் "பிரதமரின் மக்கள் நிதி (ஜன் தன்)' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

சுதந்திர தினத்தன்று இந்தத் திட்டத்தை மோடி அறிவித்திருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இதை நடைமுறைக்கு கொண்டுவரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் முதல் படியாக, வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு "ரூபே' என்ற வங்கிப்பற்று அட்டையும் (டெபிட் கார்டு),  ரூ.1 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடும் வழங்கப்படுகிறது. இதற்காக அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் மோடி, மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

நன்றி-தினமணி 
26-08-2014


லோக்பால் குழுவுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிப்பு


லோக்பால் தேர்வுக் குழுவுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:

லோக்பால் தேர்வுக் குழுவில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் குறித்து இறுதி செய்வதற்கு சட்டத் துறை அமைச்சகத்துடன், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்காக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் வழங்கப்படும் பட்டியலில் உள்ளவர்களைத் தவிர, வெளியிலுள்ள தகுதியான நபர்களை பரிந்துரைக்க லோக்பால் தேர்வுக் குழுவுக்கு விரைவில் அதிகாரம் வழங்கும் விதமாக, புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

முன்னதாக அரசு தலைமை வழக்குரைஞர் முகுல் ரோத்தகி தலையிலான குழுவினர், லோக்பால் தேர்வுக் குழுவின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ரோத்தகி குழுவின் அறிக்கையானது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் பரிசீலிக்கப்பட்டு, லோக்பால் தேர்வுக் குழுவுக்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகே லோக்பால் அமைப்புக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்ய முடியும்.

நன்றி-தினமணி 
26-08-2014

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...