23 October, 2014

TNPSC General Tamil Questions -010


ANSWERS

பறவைகள் பலவிதம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்



உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்.

அதிக பனி அல்லது அதிக வெயிலின் காரணமாக புறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது - வலசை போதல்

பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.

ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.

வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளை தின்று விவசாயிகளுக்கு உதவுகின்றன.

பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.

1. தென்னை குடித்து வாழும் பறவைகள்
2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்
3. பூச்சியை தின்று வாழும் பறவைகள்
4. வேட்டையாடி உண்ணும் பறவைகள்
5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.

பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.

சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம், கடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.

நீர்நிலையில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.

மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தாலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு, மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவரான், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.

1. தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13

2. பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்

3. உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.

4. நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.

5. பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.

6. வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.

7. அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.

8. அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.

9. நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.

*   தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:

1. வேடந்தாங்கல்
2. கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்),
3. கஞ்சிரால்குளம்
4. சித்திரஸ்குடி
5. மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
6. பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்)
7. உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்)
8. வடுவூர் (தஞ்சை மாவட்டம்)
9. கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்)
10. வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்),
11. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
12. கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்)
13. கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்)

*   தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.


21 October, 2014

TNPSC General Tamil Questions -009



ANSWERS

நாலடியார் - 6 ஆம் வகுப்பு



   நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியர் ஆயினும்

    ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம்!

    சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய் விளைக்கும்

    வாய்க்கால் அனையார் தொடர். 
                                                                                         -   சமண முனிவர் 

பொருள் :

நாயின் கால்களில் உள்ள சிறியவிரல்கள் இடைவெளியின்றி
நெருங்கியிருக்கும். இதுபோல நன்றாக நெருங்கிப் பழகினாலும், ஈயின் சிறுகால் அளவுகூட உதவி செய்யாதவர்களின் நட்பினால் பயன் இல்லை. வயல்களிலே பாய்ந்து அவைகளிலே தானியங்களை விளையச் செய்கின்ற வாய்க்கால் போன்றவர்களின் நட்பையே தேடிக்கொள்ள வேண்டும். அவர்கள் தொலைத்தூரத்தில் இருந்தாலும் தேடிக்கொண்டுபோய் அவர்களுடைய நட்பைப் பெற வேண்டும்.
இச்செய்யுளிலே நெருங்கிப் பழகுவதற்கு, நாயின் கால் விரல்களும்,
சிறிய உதவிக்கு ஈயின்காலும் உவமானங்களாகக் காட்டப்பட்டன.

சொற்பொருள்:

அணியார் = நெருங்கி இருப்பவர்
என்னாம் = என்ன பயன்?
சேய் = தூரம்
செய் = வயல்
அனையர் = போன்றோர்


*  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்.
*  நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.
*  அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.
*  நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.
*  சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்கு
உறுதி; இப்பழமொழி நாலடியாரின் பெருமையைக் காட்டும்; திருக்குறளின் சிறப்பையும் உணர்த்தும். ‘‘நாலு’’ என்பது நாலடியார்; ‘‘இரண்டு’’ என்பது திருக்குறள்.


‘‘பழகு தமிழ்ச்சொல் அருமை நாலிரண்டில்’’ என்பதும் நாலடியின்
சிறப்பையும், திருக்குறளின் பெருமையையும் காட்டும்.


பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்:

*  சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்,    பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக  மொத்தம் பதினொட்டு நூல்கள். 
*  இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக் கூறுவர்.
*  சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு -    பதினெண்கீழ்க்கணக்கு
*  பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.
*  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.
*  கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

20 October, 2014

TNPSC General Tamil Questions -008



Answers

தமிழ்த்தாத்தா உ.வே.சா.

உ வே சாமிநாத ஐயர்


  •  ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்

  •   இயற்பெயர் - வேங்கடரத்தினம்

  •   ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.

  •  அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்

  •  உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான  சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா

  •   இவரின் தந்தை - வேங்கடசுப்பையா

  •  காலம் - 19.02.1855 முதல் 28.04.1942

  •  1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் துவங்கப்பட்டது.

  •  உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.

  •   உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

  •  இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

  •   பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.

  • ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது;  ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.

  • ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.

  •   குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.

  •  தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.

  •  ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா

  •  உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.

  •   உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.

  •    குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று   ஒன்பது



  உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
  1. எட்டுத்தொகை - 8
  2. பத்துப்பாட்டு - 10
  3. சீவகசிந்தாமணி - 1
  4. சிலப்பதிகாரம் - 1
  5. மணிமேகலை - 1
  6. புராணங்கள் - 12
  7. உலா - 9
  8. கோவை - 6
  9. தூது - 6
  10. வெண்பா நூல்கள் - 13
  11. அந்தாதி - 3
  12. பரணி - 2
  13. மும்மணிக்கோவை - 2
  14. இரட்டைமணிமாலை - 2
  15. பிற பிரபந்தங்கள் - 4

17 October, 2014

"உழைப்பே வெல்லும்' புதிய திட்டம்-பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்

உழைப்பே வெல்லும்

"உழைப்பே வெல்லும்' புதிய திட்டம்: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
தொழிலாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில் "உழைப்பே வெல்லும்' என்ற புதிய செயல்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் தொடக்கி வைத்தார்.(16-10-2014)

தில்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் "தீனதயாள் உபாத்யாய ஷிரமேவ ஜெயதே' (உழைப்பே வெல்லும்) என்ற செயல்திட்டத்தின் கீழ், பல்வேறு துணைத் திட்டங்களை பிரதமர் தொடக்கி வைத்தார். தொழிலாளர் வைப்பு நிதியை எளிதில் மாற்றிக் கொள்ள ஏதுவாக நிரந்தரக் கணக்கு எண், தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்துடன் தொடர்புகொள்ள ஒற்றைச் சாளர இணையதள வசதி, தொழிலக ஆய்வுத் திட்டம் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.

திறன் ஊக்குவிப்புத் திட்டம்: "புரோத்சாஹன் யோஜனா' என்ற பெயரிலான பயிற்சி மாணவர்களின் திறன் ஊக்குவிப்புத் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது: உலகிற்கு மனித ஆற்றலை வழங்குவதற்கான மிகப்பெரிய வளம் நம் நாட்டில் உள்ளது. தற்போது, நாட்டில் 2.82 லட்சம் பயிற்சி மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களின் பயிற்சித் திட்டத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்புக் கணக்குகளில் ரூ.27,000 கோடி உரிமை கோரப்படாமல் கிடக்கிறது. அதன் உரிமையாளர்களுக்கு இத்தொகையைத் திருப்பி அளிக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருக்கிறேன். இந்தப் பணமானது ஏழைகளுக்குச் சொந்தமானது.

அரசானது நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயல்படுகிறதே தவிர, சந்தேகத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, மாணவர்கள் சுயச் சான்றளிப்பு ஆவணங்களை அளிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. முன்பு, அதிகாரிகளின் கையொப்பத்தைப் பெறுவதற்காக மாணவர்கள் மிகவும் அலைய வேண்டியிருந்தது. அந்த முறையைத் தற்போது நீக்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பற்ற, ஏதோ ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற ஒரு பட்டதாரி, சமூகத்தால் மதிக்கப்படுவதும், ஐ.டி.ஐ. தொழில் பயிற்சி நிலையங்களில் பயின்றோர் மதிக்கப்படாததும் முரண்பாடாக இருக்கிறது. நாம் தொழிலாளர்களை மரியாதைக்குரியவர்களாகக் கருதுவதில்லை. இந்நிலை மாற வேண்டும். ஷிரம யோகியானவர் (உழைப்பாளர்), ராஷ்டிர யோகியாகவும் (நாட்டுக்கு உழைப்பவர்), ராஷ்டிர நிர்மாதாவாகவும் (தேசத்தைக் கட்டமைப்பவர்) மாறுவதை கருணையுடன் கூடிய அணுகுமுறை உறுதிப்படுத்தும்.

15 October, 2014

பிரெஞ்ச் பேராசிரியர் ஜீன் டிரோலுக்கு பொருளாதார அறிவியலுக்கான நோபல்


2014 ஆம்  ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையின் ஆற்றல், அதனை முறைப்படுத்துவது குறித்த மிகச் சிறந்த ஆய்வுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

ஸ்வீடன் விஞ்ஞானியான ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக, பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிப் பணி ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு பொருளாதார நிபுணர் ஜீன் டிரோலுக்கு வழங்கப்படுவதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஸ்விட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் நகரிலுள்ள "ராயல் ஸ்வீடிஷ் அகாடமி'யில் இந்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுக் குழு தெரிவித்ததாவது:

மிகச் சில நிறுவனங்களின் நடவடிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு,  தொழில்துறையை கட்டுப்படுத்துவதற்கான புரிந்துணர்வை அரசுகளுக்கு ஏற்படுத்தியமைக்காக ஜீன் டிரோலுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பாக ஜீன் டிரோல் 1980-களின் மத்தியிலிருந்தே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துவது, உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் வாயிலாக நிறுவனங்கள் ஏகபோக உரிமையை நிலைநாட்டுவதை அரசுகள் எவ்வாறு கையாளவேண்டும் என்பதை அவரது ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முதல் வங்கிகள் வரையிலான பல்வேறு துறை நிறுவனங்கள் குறித்தும் தொழில் கொள்கை வகுக்க அவரது புத்தகங்கள் பேருதவி புரிகின்றன என்று தேர்வாளர்கள் குறிப்பிட்டனர்.

ஆல்ஃபிரட் நோபலால் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு உருவாக்கப்படவில்லை என்றாலும், அத்துறையை ஊக்கப்படுத்துவதற்காக ஸ்வீடன் மத்திய வங்கி 1968-ஆம் ஆண்டு இந்த விருதை உருவாக்கியது.

ஜீன் டிரோல் உள்பட, இந்த ஆண்டு நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் ஆல்ஃபிரட் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசு வழங்கப்படும்.

ஜீன் டிரோல் (61)
பிரான்ஸின் டிராயஸ் நகரில் 1953-ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீன் டிரோல். மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1981-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற இவர், டூலூஸ் பொருளாதாரக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். ஹங்கேரியில் வழங்கப்படும் கெளரவம் மிக்க "ஜான் வான் நியூமன்' விருதினை 1998-ஆம் ஆண்டு இவர் வென்றுள்ளார்.

14 October, 2014

திருவாரூர் நான்மணிமாலை


என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோவில் முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் – அன்புஎன்னாம் புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகு வார் சொற்பொருள்: என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த தென்கமலை – தெற்கில் உள்ள திருவாரூர் பூங்கோவில் – திருவாரூர் கோவிலின் பெயர் புண்ணியனார் – இறைவன் நூல் குறிப்பு: திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர் நான்மணிமாலை. இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப் பொருள்படும். நான்மணிமாலை என்பது தமிழில் வழங்கும் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆனா மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆனா நாற்பது செய்யுள்களை கொண்டது.
குமரகுருபரர்
திருச்செந்தூர் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாக குழந்தையில்லாத இத்தம்பதியர் கந்தசஷ்டி விரதமிருந்து ஒரு ஆண்குழந்தையைப் பெற்றனர். குழந்தைக்கு குமரகுருபரன் என்று வைத்தனர். பிறந்ததில் இருந்து குழந்தைக்கு பேச்சு வரவில்லை. பெற்றோர் கவலையடைந்தனர். கவிராயர் ஒரு முடிவுக்கு வந்தவராய், சிவகாமி நமது பிள்ளை குருபரன், முருகன் கொடுத்த வரம். அவனால் தான் குழந்தைக்கு பேசும் ஆற்றலை தர முடியும். நாம் திருச்செந்தூர் சென்று அவனிடம் முறையிட்டு விரதம் இருப்போம். அவன் பார்த்து எது செய்தாலும் சரி என்றார். அதன்படி அவர்கள் குழந்தையுடன் திருச்செந்தூர் சென்றனர். கடலலைகள் கோயில் மதிற்சுவரில் அடித்து விளையாடியதை குருபரன் பார்த்து கொண்டிருந்தான். கடலுக்குள் இறங்கி அலைகளுடன் விளையாடினான். அந்த அலைகள் கரைகளில் மோதிய சப்தத்தில் ஓம், ஓம் என்ற மந்திர ஒலி கேட்டது. கவிராயரும், அவரது மனைவியும் அங்கேயே தங்கி விரதம் மேற்கொண்டனர். காலையில் கடலில் குளித்து, நாழிக்கிணற்றில் நீராடி முருகனை வழிபட்டு, ஒருவேளை உப்பில்லாத உணவு சாப்பிட்டு 40 நாள் விரதமிருந்தனர். ஆனால், குருபரனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேதனை மிகுந்த பெற்றோர், குழந்தை பேசும் வரை கோயிலை விட்டு செல்லமாட்டோம் என பிடிவாதமாக முருகனிடம் சொல்லி விட்டனர். 45வது நாள் மாலையில், கவிராயர் தன் மனைவி குழந்தையுடன் கோயிலுக்குள் நுழைந்தார். குழந்தை ஏக்கத்துடன் பெற்றோரை பார்த்தது. இதைக்கண்ட தகப்பனின் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் கொட்ட, முருகா! என் தெய்வமே! இன்னும் எத்தனை நாள் தான் எங்களை சோதிப்பாய். நீ கருணைக்கடல் ஆயிற்றே! இந்த குழந்தைக்கு மட்டும் கருணை காட்டாதது ஏன்? என மனமுறுகி பிரார்த்தித்தார். அவரது மனைவியும், சண்முகா! குழந்தை இல்லாமல் இருப்பது கொடுமைதான். அதைவிட கொடுமையானது ஊமைக்குழந்தையை வைத்திருப்பது இல்லையா? நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களுக்கு தண்டனை கொடு. இந்தக்குழந்தை என்ன தவறு செய்தது? அதை ஏன் தண்டிக்கிறாய்? எங்கள் குழந்தையை காப்பாற்று, என கதறினாள். இந்த நிலையில் குருபரன் வாய்திறந்து ஏதோ பேச முற்பட்டான். பெற்றோர்கள் கூர்ந்து கேட்க, தெளிவில்லாமல் ஏதோ சில சொற்களை சொன்னான். அடுத்த சில நொடிகளில் அந்த பாலகன், கார்மேகம் கடும் மழை பொழிவது போல கவி மழை பொழியலானான். முருகனைப்பற்றிய பாடல்கள் அவன் வாயிலிருந்து காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு ஒலித்தது. குழந்தை பேசமாட்டானா என ஏங்கியிருந்த பெற்றோர் வாயடைத்து நிற்க, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களும் இந்த அதிசயம் கண்டு திகைத்து நின்றனர். தேனினும் இனிய குரலில் அவன் பாடிய பாடல் தொகுப்பே கந்தர் கலிவெண்பா ஆகும். இதுவே குமரகுருபரரின் முதல் நூல் ஆகும். சரவணபவ என்ற மந்திரத்தின் மகிமையை வெண்பாக்களாக விட்டார் குருபரர். குமரா! முருகா! உனது கருணையால் ஊமையும் பேசுவது மட்டுமில்லாமல், பெரும் கவிஞனும் ஆவான் என்பதை நிரூபித்துவிட்டாய். உனது கருணையே கருணை என உள்ளம் நெகிழ்ந்தனர் பெற்றோர். பெரும்கவியாக திகழ்ந்த குருபரர் பெற்றோருடன் அதிக நாட்கள் தங்கவில்லை. அவர்களது ஆசியுடன் தல யாத்திரை புறப்பட்டார். மக்கள் அவரை குமரகுருபர சுவாமிகள் என அழைத்தனர். ஒருமுறை குமரகுருபரர் மதுரை மீனாட்சி கோயிலுக்கு வந்தார். மீனாட்சி சன்னதியின் முன் நின்றிருந்த போது, மடை திறந்த வெள்ளம் போல், மீனாட்சி பிள்ளைத்தமிழ் பாடலை பாடினார். அன்னையை சிறு குழந்தையாக பாவித்து, அவளது அழகு, அருள், ஆற்றல், திருவிளையாடல்கள் அனைத்தையும் பாடி நூலாக வடித்தார். அந்நாளில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் கனவில் மீனாட்சி தோன்றி, மன்னா! என் செல்லக் குழந்தை குமரகுருபரன் மதுரை வந்துள்ளான். அவன் என்மீது பாடிய நூலை யாம் கேட்டு ஆனந்தமடைய ஏற்பாடு செய்க என்று பணித்தாள். உடனே மன்னர் குமரகுருபரர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று அவர் பாதம் பணிந்து அம்மனின் விருப்பத்தை கூறினார். கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

புலவர்கள் எல்லாம் கூடியிருக்க, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் அரங்கேறி கொண்டிருந்தது. அப்போது கோயில் தலைமை அர்ச்சகரின் மகள் அங்கு வந்து மன்னரின் மடியில் உரிமையுடன் அமர்ந்து குருபரர் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும் சிறுமி உரிமையுடன் மன்னரின் கழுத்திலிருந்த மணிமாலையை கழற்றி குருபரரின் கழுத்தில் அணிவித்தாள். பின் மூலஸ்தானத்தை நோக்கி நடந்து மறைந்தாள். அதன் பின்தான் வந்தது மீனாட்சி என அனைவருக்கும் தெரிந்தது. பின்னர் குமரகுருபரர் காசி சென்று விஸ்வநாதரை புகழ்ந்து பாடினார். ஒரே நாளில் இந்துஸ்தானி கற்று அங்கியிருந்த சுல்தானிடம் பேசி, அனுமதி பெற்று கேதார் ஆலயத்தின் அருகே குமாரசுவாமி மடம் என்ற சைவ மடத்தை நிறுவினார். இப்போதும் காசியில் இந்த மடம் சமயப்பணி செய்து வருகிறது. குமரகுருபரர் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, மதுரைக் கலம்பகம், சிதம்பரச் செய்யுட் கோவை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை என இன்னும் பற்பல நூல்களால் தமிழன்னையை அலங்கரித்த பெருமகன் அவர். முருக பக்தராகவும், மீனாட்சிபக்தராகவும், சரஸ்வதி பக்தராகவும் திகழ்ந்தவர். காசியில் ஒளரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ என்ற மன்னர்முன் சிங்கத்தின் மேல் ஏறிச் சென்று அந்த சுல்தானை வியக்க வைத்து, தாம் காசியில் நிறுவிய இந்து மடத்திற்கு நிலத்தை தானமாகப் பெற்றவர். இவர் காசியில் இந்துஸ்தானி மொழியில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவைக் கேட்டுக் கவரப்பட்டுத்தான் துளசிதாசர் இந்தியில் ராமாயணம் எழுதும் உத்வேகம் பெற்றார். முருகப் பெருமானையே சிந்தனை செய்து வாழலானார் குமரகுருபரர் சில ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் அவர் தன் பெற்றோரை அழைத்தார். இந்த உலகிற்கு நான் வரக் காரணமானவர்கள் நீங்கள். இப்பிறவியில் நீங்களே என் தாய், தந்தை ஆனால் எல்லா ஆன்மாக்களுக்கும் என்றென்றும் தாயாகவும் தந்தையாகவும் பரம்பொருளை நாடுகிறது என் உள்ளம். நான் துறவுநெறியில் ஈடுபட்டுத் தமிழையே துணையாய்க் கொண்டு வாழ விரும்புகிறேன். உங்களை நான் பிரிந்து செல்வதாக எண்ணலாகாது. உங்களுக்கும் சொந்தமான முருகன் அருள் உங்களை எப்போதும் காத்து நிற்கும்! கடவுள் துணை உங்களுக்கும் இருக்கும்போது நான் என்கிற இந்த மனிதத் துணை தேவையில்லை. ஒரே ஊரில் நான் வாழ்வதை விரும்பவில்லை. பல ஊர்களுக்குச் சென்று பல்வேறு ஆலயங்களை தரிசித்து அங்குள்ள தெய்வங்கள் பற்றியெல்லாம் பாடல் புனைய விழைகிறேன்! தன் அருமைப் புதல்வன் பேசிய பேச்சைக் கேட்டுக் கவிராயரின் கண்கள் கசிந்தன. பிள்ளைக்கு மணமுடித்துப் பேரன் பேத்தியைப் பார்க்க எண்ணியிருந்த சிவகாச சுந்தரி செய்வதறியாது திகைத்தாள். அப்போது முருகன் அவள் ஏற்கெனவே தன் சன்னதியில் சொன்ன வாசகத்தை அவள் ஆழ்மனத்தில் நினைவுபடுத்தினான். முருகன் அருளால் பிறந்த குழந்தை முருகனிடமே இவனை ஒப்படைப்போம் என்றல்லவா அன்று சொன்னாள்? முருகன் திருவருளால் இத்தனை ஆண்டு காலம் குமரகுருபரனோடு வாழும் பேறு கிடைத்தது. மற்றபடி முருகன் சன்னதியில்தானே இவன் கவிமழை பொழியத் தொடங்கினான்? அன்றே முருகன் இவனை ஆட்கொண்டு விட்டான். தன் பிள்ளையாகத் தமிழன்னைக்குத் தத்துக் கொடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதை அவள் புரிந்துகொண்டாள். கண்ணீர் வழிய வழிய அவனை நிரந்தரமாக வழியனுப்பி வைத்தாள். விம்மிய உதடுகளைத் துண்டால் மறைத்துக் கொண்டு கவிராயரும் அவனுக்கு விடைகொடுத்தார். பெற்ற பிள்ளை எப்போதும் பெற்றோருடன் இருந்தால்தான் ஆயிற்றா? அவன் எங்கிருந்தாலும் அவன் புகழைக் கேட்கும்போதெல்லாம் தாங்கள் பெற்ற பிள்ளை என்ற ஆனந்தம் அவனால் கிடைக்கத்தானே போகிறது? அந்த ஆனந்தத்திற்கு விலையேது? குமரகுருபரன் தங்களின் தற்காலிகக் குழந்தைதான். அந்த உறவு நிலையல்ல, செந்தூர்க்குமரனே தங்களின் நிரந்தரக் குழந்தை, கடவுளே நிலையான உறவு என்பதை அவர்கள் மனம் புரிந்துகொண்டு ஆறுதல் அடையத் தொடங்கியது. எஞ்சிய வாழ்வைச் செந்தூர் முருகன்மேல் பக்தி செலுத்தி அவர்கள் வாழலானார்கள். வாய்பேசாத குழந்தைக்குக் கடவுள் அருளால் வாய்ப்பேச்சு வந்ததும், பெற்றவர்கள் சில ஆண்டுகள் அவனை வளர்த்துக் கடவுள் பணிக்கே அவனைத் தந்ததும், உறவுகளைத் துறந்து அவன் துறவியாக வாழ்ந்ததும் குமரகுருபரன் கதை.

10 October, 2014

இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவருக்கும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு



இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர்.

குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி

டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.

குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள் பல்வேரு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உண்டு. இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவை நிறைய ஆவணப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் என்று தாக்கம் செலுத்தியுள்ளது.

இவரது இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் இவரது அமைப்பினால் மீட்கப்பட்ட ஏகப்பட்ட சிறார்களுடன் புது டெல்லியில் வாழ்ந்து வருகிறார்.

மலாலா


இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன் அமைதி நோபல் பரிசைப் பெறுகிறார் சிறுமி மலாலா யூசுப்சாய். பாகிஸ்தானில் மகளிர் கல்விக்காக போராடி, அதனால் பல இன்னல்களையும், தாலிபான்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ள  மலாலாவுக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது நோபல் கமிட்டியின் ஒரு திட்டமிட்ட பார்வையின் விளைவினால் என்று கூறப்படுகிறது.

அதாவது, ஓர் இந்து மற்றும் ஒரு முஸ்லிம், அதிலும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசினை அளிக்கும்போது கல்வி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராகக் கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்களிப்பு செய்ய முடிவதாக நோபல் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

இன்று உலகில் 168 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். 2000ஆம் ஆண்டில் இதைவிட 78 மில்லியன் அதிகம் இருந்தது. எனவே குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கமல், முற்றிலும் இல்லாமல் செய்யும் லட்சியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உயரிய நோபல் பரிசை வெல்லும் இளம் வயது சாதனையாளர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெறுகிறார் 17 வயது யூசுப் மலாலா.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...